வளர்ப்பு நாயுடன் தொழில் அதிபர் தற்கொலை
வளர்ப்பு நாயுடன் தூக்குப்போட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தில் வசித்து வந்தவர் ராஜீவ் (வயது 45). சேலத்தை சேர்ந்த இவர் தனது மனைவியுடன் ஆயத்த ஆடை தைத்து வழங்கும் தொழில் செய்து வந்தார். ஆண் நாய் ஒன்றையும் இவர் வளர்த்து வந்தார். இவருக்கு கடன் சுமை இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவரது மனைவி வீட்டை விட்டு சென்று விட்டார். அதன்பின்னர் ராஜீவ் மட்டும் வீட்டில் ஆயத்த ஆடைகளை தயாரித்து அனுப்பி வந்தார். மனைவி பிரிந்து சென்ற நிலையில் நன்றியுடன் தன்னுடன் இருந்த வளர்ப்பு நாய் மீது அவர் அதிக பாசம் காட்டி வந்தார். இந்த நிலையில் கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நாயுடன் தற்கொலை
தான் இறந்து விட்டால் தான் வளர்த்து வந்த நாய் தெருநாயாகி அனாதையாகிவிடுமே என நினைத்த அவர் அதனையும் தூக்கில்போட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டார். இந்த நிலையில் அவர் நாயின் கழுத்திலும், தனது கழுத்திலும் கயிறை மாட்டி மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதில் ராஜீவ் தனது வளர்ப்பு நாயுடன் இறந்து விட்டார்.
ஒருவாரம் ஆன நிலையில், துர்நாற்றம் வீசியதால் அவர் தனது நாயுடன் தற்கொலை செய்து கொண்டது நேற்று தான் தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலீசார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜீவ் மற்றும் நாயின் உடலை தூக்கில் இருந்து இறக்கினர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.