அரியலூர் நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு


அரியலூர் நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு
x

அரியலூர் நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், நகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நகராட்சி அலுவலர் செந்தில்குமார் தீர்மானங்களை படிக்காமல், பொருள் எண் 1, 2 என வாசித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. கவுன்சிலர் வெங்கடாசலம், மன்ற பார்வைக்கு கொண்டு வந்துள்ள 53 தீர்மானங்களையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த துணைத் தலைவர், 53 தீர்மானங்களையும் வாசிக்க நேரமாகும். எனவே கால விரையத்தை கருத்தில் கொண்டு இது போன்று வாசிக்கப்படுகிறது என்றார். இதைத்தொடர்ந்து தீர்மானங்களை அலுவலர் வாசித்தார்.

அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் வெங்கடாசலம், நிதியில்லை என்று நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. தீர்மானத்தில் உள்ள செலவினங்களை பார்க்கும்போது ரூ.1 கோடிக்கு மேல் செலவாகும். தற்போது நகராட்சியில் பொது நிதி எவ்வளவு உள்ளது. எந்தந்த வங்கியில் கணக்கு உள்ளது என்று தெரிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. ஆதரவு கவுன்சிலரான புகழேந்தி, பொது நிதி குறித்து தெரிவிக்கப்படாது என்று தெரிவித்ததால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை துணை தலைவர் அமைதிபடுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 53 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.


Next Story