விழுப்புரத்தில் பரபரப்பு:டிரைவர், கண்டக்டரை தாக்கிய பெண்நடுரோட்டில் அரசு பஸ்சை நிறுத்தி திடீர் போராட்டம்


விழுப்புரத்தில் பரபரப்பு:டிரைவர், கண்டக்டரை தாக்கிய பெண்நடுரோட்டில் அரசு பஸ்சை நிறுத்தி திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை பெண் ஒருவர் தாக்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7.30 மணியளவில் கண்டமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ், காந்தி சிலை நிறுத்தத்தை கடந்து செல்லும்போது பஸ்சை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதற்கு டிரைவர், உழவர் சந்தை நிறுத்தம் அருகில் பஸ்சை நிறுத்துவதாகவும், அங்கிருந்து ஏறிக்கொள்ளும்படியும் கூறி பஸ்சை இயக்கினார். உடனே அந்த வாலிபரும், பெண்ணும் மோட்டார் சைக்கிளில் பஸ்சை முந்திச்சென்றவாறு உழவர் சந்தை அருகில் பஸ்சுக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கிய அப்பெண், பஸ்சிற்குள் ஏறிச்சென்று டிரைவரிடம், பஸ்சை நிறுத்தச்சொன்னால் நிறுத்த மாட்டாயா எனக்கேட்டு அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதை தட்டிக்கேட்ட பஸ் கண்டக்டரையும் அந்த பெண் திட்டி தாக்கினார். பின்னர் அந்த பெண், வேக வேகமாக பஸ்சிலிருந்து கீழே இறங்கி அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றார்.

இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர், பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தினார். தன்னை தாக்கிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர் உடனடியாக தன்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை பஸ்சை இங்கிருந்து எடுக்க மாட்டேன் என்று கூறினார். இதன் காரணமாக விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையாக புகார் கொடுக்கும்படியும், அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story