பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பயணிகள் நிழற்குடை-அணுகுசாலை
பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பயணிகள் நிழற்குடை-அணுகுசாலை அமைக்கப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விக்கிரவாண்டி முதல் தஞ்சாவூர் வரை சுமார் 160 கிலோ மீட்டருக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக ஏற்கனவே இடம் அளக்கப்பட்டு, இருபுறமும் 100 மற்றும் 75 அடி இடத்தை நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தப்பட்டு, சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதேபோல் திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் கங்கவடங்க நல்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலை அருகே பயணிகள் நிழற்குடையும், அணுகுசாலையும் அமைக்க வேண்டும் என்று இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் உதயசங்கர் சாலை பணியை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பயணிகள் நிழற்குடையும் மற்றும் அணுகு சாலையும் அமைத்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.