வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல்


வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல்
x
தினத்தந்தி 8 July 2022 4:50 PM GMT (Updated: 9 July 2022 5:22 AM GMT)

வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை பலத்த பாதுகாப்புடன் நடக்கிறது.

தேனி

இடைத்தேர்தல்

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 9 பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரியகுளம் நகராட்சி 26-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு

வடபுதுப்பட்டியில் 9,379 வாக்காளர்கள், டி.வாடிப்பட்டியில் 126 வாக்காளர்கள், சின்னஓவுலாபுரத்தில் 480 வாக்காளர்கள் என மொத்தம் 9,985 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குச்சீட்டுகள், வாக்காளர் பட்டியல், கை விரலில் வைக்கும் அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் சின்னமனூர், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இன்று அனுப்பி வைக்கப்பட்டன.பின்னர் வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இந்த தேர்தலை அமைதியாக நடத்த சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சீட்டுகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களான பெரியகுளம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அறைகளில் வைத்து 'சீல்' வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ந்தேதி நடக்கிறது.


Next Story