ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி-தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன் வாக்குசேகரிப்பு;வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர்


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி-தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன்  வாக்குசேகரிப்பு;வீடுவீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர்
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

ஈரோடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, தா.மோ.அன்பரசன், ராமச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

ரூ.458 கோடி ஒதுக்கீடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 'கை' சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, ஈரோடு புதுமஜித் வீதி, கந்தசாமி வீதி, கொங்காலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து நேற்று வாக்கு சேகரித்தனர்.

வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தபோது அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறோம். ஏற்கனவே ஈரோடு மாநகராட்சியில் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், மேலும் ரூ.458 கோடி ஒதுக்கப்பட்டு, தேர்தல் முடிந்த பின் அந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேம்பாலம்

அ.தி.மு.க.விற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை நாங்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எங்களது வெற்றியை தடுக்க முடியாது. எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. அ.தி.மு.க.வினர் அவர்களது ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால், ஈரோடு மாநகரில் முறையான திட்டமிடல் இல்லாமல் மேம்பாலம் கட்டியுள்ளனர். அதனால், அந்த மேம்பாலம் பயன் இல்லாமல் இருக்கிறது.

மக்கள் பணத்தை வீணடித்துள்ளனர். இதேபோல் எந்த திட்டங்களையும் அ.தி.மு.க. வினர் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் செய்துள்ளதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜவுளி வணிக வளாகத்தில் ஒரு சில வசதிகள் இல்லை என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

தி.மு.க. வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் இல்லை என முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகிறார். வாக்கு உடையவர்கள், சிலர் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து விட்டனர். வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு கட்டும் போது சிலரை வேறு பகுதியில் தற்காலிகமாக குடியமர்த்தியுள்ளனர். அது தான் எங்களுக்கு வந்த தகவல். இதுதொடர்பாக தகவல் வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பல்லாவரம் கருணாநிதி, பகுதி செயலாளர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனா்.


Next Story