ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி பிரசாரம்; அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி ஆகியோர் பிரசாரம் மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
பிரசாரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக அமைச்சர் சு.முத்துசாமி தினந்தோறும் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு அன்னை சத்யா நகரில் மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமகன் ஈவெரா பொதுமக்களிடமும், தொகுதி மக்களிடமும் நெருக்கமாக இருந்து வந்தார். அவர் பொதுமக்களிடம் பழகும் விதம், அணுகும் விதம் அமைதியாக இருக்கும். குறுகிய காலத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் மேற்கொண்டார்.
இடைத்தேர்தலில் வெற்றி
நாங்கள் கடந்த 12 நாட்களாக வாக்கு சேகரிக்கும் போது பெண்கள் மிகவும் துயரத்துடன் திருமகன் மறைவை கூறி வேதனைப்பட்டு எங்கள் வாக்கு உங்களுக்கு தான் என்று கூறி வருகின்றனர். திருமகன் ஈவெரா நடவடிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நன்கு கவனித்து வந்துள்ளார். அவர் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த முதல்-அமைச்சர் உடனடியாக அன்று இரவு ஈரோட்டுக்கு கிளம்பி வந்தார். மறுநாள் எனக்கு போன் செய்து திருமகன் நினைவாக நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது திருமகன் ஈவெரா வசித்த கச்சேரி வீதியை திருமகன் ஈவெரா வீதி என்று பெயர் மாற்றினார். நாங்கள் நிச்சயமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம்.
வேட்புமனு தாக்கல்
நாளை (அதாவது இன்று) தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோர் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளனர். அதற்கான அட்டவணை தயாராகி வருகிறது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் இருந்தனர்.