ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 22 மாதங்களில் செய்தது என்ன? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னோடு ஒரே மேடையில் பேச தயாரா?- எடப்பாடி பழனிசாமி சவால்


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 22 மாதங்களில் செய்தது என்ன? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேச தயாரா ? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டு பேசினார்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 22 மாதங்களில் செய்தது என்ன? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பேச தயாரா ? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விட்டு பேசினார்.

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று இரவு வீதி வீதியாக பிரசாரம் செய்தார். பெருந்துறை ரோடு பண்ணை நகர் பகுதிக்கு நேற்று மாலை வந்த அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கணபதி நகர், நாச்சாயி டீக்கடை, இடையன்காட்டு வலசு, நசியனூர் ரோடு, அரசு ஆஸ்பத்திரி, தில்லை நகர், ஈஸ்வரன்கோவில் வீதி, மணிக்கூண்டு, காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், ஸ்டோனிபாலம் வழியாக பெரியார் நகர் நுழைவுவாயில் பகுதிக்கு வந்தார்.

அவர் வந்த இடம் எல்லாம் பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த வண்ணம் 2 விரல்களை காட்டி உற்சாகமாக வந்தார். சில இடங்களில் மக்கள் பூக்கள் வாரி வீசி அவரை வரவேற்றனர். ஆரத்தி எடுத்தும், பூரண கும்பம் எடுத்தும் வரவேற்பு கொடுத்தனர்.

பெரியார் நகர் நுழைவுவாயில் பகுதியில் அவர் வந்தபோது பல்வேறு வேடங்கள் அணிந்த கலைஞர்கள், இசைக்குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து பேசினார்.

மக்கள் விரோத ஆட்சி

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க.ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு பணியைக்கூட நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டிக்கொண்டும், அடிக்கல் நாட்டிக்கொண்டும் இருக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார். நடக்கிறார், சைக்கிள் ஓட்டுகிறார். பளு தூக்குகிறார். இதை யார் உங்களிடம் கேட்டது. நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்கள். தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. மக்களுக்கு துன்பம், துயரம், வேதனை தவிர வேறு என்ன மக்களுக்கு கிடைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.81 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கொண்டு வந்தோம். ரூ.61 கோடியில் உபகரணங்கள் வாங்கிக்கொடுத்தோம். இது எல்லாம் அ.தி.மு.க. சாதனை என்று நாங்கள் வாக்கு கேட்டு வருகிறோம். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் ரூ.484 கோடியில் திட்டமிட்டு, பணியை தொடங்கி வைத்து, நிறைவேற்றி உள்ளோம். தி.மு.க. ஆட்சியில் 22 மாதங்களில் ஒரு நன்மையை செய்து இருக்கிறீர்களா?.

துணிவு, தெம்பு

நாங்கள் 10 ஆண்டுகளில் என்ன செய்து இருக்கிறோம் என்பதை கூறுகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீங்கள் நாளை (அதாவது இன்று) வருகிறீர்களே அப்போது உங்களுக்கு துணிவு, தெம்பு, திராணி இருந்தால் இந்தியாவிலேயே நான்தான் சூப்பர் முதல்-அமைச்சர் என்கிறீர்களே, முதன்மை முதல்-அமைச்சர் என்கிறீர்களே, தனக்கு தானே பாராட்டிக்கொள்கிறீர்களே, இந்த கிழக்கு தொகுதிக்கு என்ன செய்து இருக்கிறீர்கள் என்று பட்டியலிட்டு பேச தயாரா?.

அரசு ஆஸ்பத்திரி அருகே உயர்மட்ட பாலம். ரூ.81 கோடி செலவில் புதை வட மின்கம்பி பதித்து மின்தடை இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். ரூ.180 கோடியில் பெரும்பள்ளம் ஓடையின் 2 புறமும் சாலைகள் அமைக்கப்படுகிறது. மாநகரம் முழுவதும் ரூ.25½ கோடியில் எல்.ஈ.டி. தெருவிளக்குகள் போட்டு இருக்கிறோம். இப்படி ஏதாவது ஒரு திட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் சொல்வாரா?. தாலிக்கு தங்கம், அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும் திட்டம், அம்மா சிமெண்ட் என்று எதுவும் இல்லை.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் இருக்கிறார். குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை தருவதாக கூறினார். கொடுத்தாரா?. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு என்று இருக்கிறது.

ஏமாற்றக்கூடாது

தி.மு.க. ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது அமைச்சர்கள் உங்கள் வீடு தேடி வாக்கு கேட்க வரும்போது 22 மாதத்துக்கான ரூ.22 ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.100 என்று ரூ.2 ஆயிரத்து 200 என 24 ஆயிரத்து 400 ரூபாய் கேட்டு வாங்குங்கள். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். குடும்ப சூழலால் சிரமத்தில் உள்ள மக்களை ஆடுகளை ஓட்டுவதுபோல பட்டியில் அடைத்து கொடுமை படுத்துகிறீர்கள். நாட்டில் இப்படி ஒரு கொடுமை நடந்தது இல்லை.

சட்டம்-ஒழுங்கு

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கிடக்கிறது. சந்தி சிரிக்கிறது. திறமையற்ற ஒரு பொம்மை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பதுதான் இதற்கு காரணம்.

அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி. நீங்கள் பேசுவதற்கு தகுதி இல்லை. நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. ஒரே மேடையில் பேசலாமா?. நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுங்கள். என்னால் ஒரு பேப்பரைக்கூட பார்க்காமல் நாங்கள் செய்த திட்டங்களை பேச முடியும். எங்கள் 10 ஆண்டு ஆட்சியை இருண்ட ஆட்சி என்கிறீர்கள். தி.மு.க.வின் 22 மாத ஆட்சி பேய் ஆட்சியாக உள்ளது.

விவசாயம், கல்வி, தொழில் என்று அனைத்திலும் சாதனை படைத்த அ.தி.மு.க.வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கே.சி.கருப்பணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.சி.ராமசாமி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பென்சமின், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், கடம்பூர் ராஜூ, மோகன், சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. செம்மலை, எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, பகுதி செயலாளர் மனோகரன், பா.ஜனதா விவசாய அணி மாநில துணைத்தலைவர் தங்கராஜ், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story