தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடித்தார்களா?- சீமான் கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடித்தார்களா? என்று ஈரோட்டில் சீமான் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கண்டுபிடித்தார்களா? என்று ஈரோட்டில் சீமான் கேள்வி எழுப்பினார்.
தமிழன்
நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று 3-வது நாளாக, ஈரோடு வ.உ.சி. பூங்கா, திருநகர் காலனி, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கரும்பு விவசாயி சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழர் வாழாத நாடில்லை. ஆனால் தமிழர்கள் வாழ உள்ளங்கை அளவு கூட ஒரு நாடு இல்லை. நம்முடைய இனத்திற்காக ஒரு நாடு வேண்டும் என்று போராடியவர் பிரபாகரன். என் மொழி, இனம் வாழ வேண்டும் என்றால் என் தமிழை நேசிக்கிற ஒரு தமிழன் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். இந்த நோக்கம் இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு தான் வரும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்போம் என்று கூறினார்கள். அதை நிறைவேற்றினார்களா? கொடநாடு கொலை பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். எடுத்தார்களா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர் யார்? என்று கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்றார்கள். எடுத்தார்களா?. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம் என்று கூறும் மிகப்பெரிய நாடக நிறுவனம்.
தலைமை அலுவலகம்
போலீசாரிடம் எனக்கு பாதுகாப்பு வேண்டாம் என்று கூறினால் மேலே இருந்து உத்தரவு என்று கூறுகிறார்கள். அப்படி யார் தான் மேலே இருக்கிறார்களோ தெரியவில்லை. திராவிட ஆட்சி என்று கூட அவர்களால் கூற முடியவில்லை. திராவிட மாடல் என்று தான் கூறுகிறார்கள். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெல்லும் என்று கூறுகிறார்கள். காசு கொடுக்காமல் என்னை உங்களால் வீழ்த்த முடியுமா?.
சுகாதாரமான குடிநீர் தருகிறோம், அனைவருக்கும் இலவச கல்வி தருகிறோம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுக்கிறோம் என்று கூறி வாக்குகள் சேகரிக்கிறோம். வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள். ஆனால் நீங்கள் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறீர்கள். மக்களின் வழக்கு எவ்வளவு ஆண்டுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அரசியல் வழக்கு உடனுக்குடன் தீர்ப்பு சொல்லப்படுகிறது. கோர்ட்டுகள் எல்லாம் இன்று கட்சிகளின் தலைமை அலுவலகங்களாக செயல்பட்டு வருகிறது.
மனஅழுத்தம்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இந்திக்காரர்கள் இன்று இங்கு வந்து வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். வடமாநிலத்தவர்கள் ரெயிலில் செல்லும்போது கழிவறைக்கு முன்பு அமர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய குழந்தைகள் கழிவறைக்கு செல்ல முடிவதில்லை. போலீஸ் காரர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை கொடுங்கள். விடுமுறை இல்லாததால் தான் நெருக்கடி, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
காவலர்கள் எங்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க. தலைவர்களுக்கு அல்ல. விடுமுறையே இல்லாத ஒரு துறை தான் காவல்துறை. எனக்கு பாதுகாப்பு தர வேண்டாம். என்னை பாதுகாக்க என் தம்பி, தங்கைகள் உள்ளனர். இன வெறி இருக்க வேண்டும். தமிழ் தேசிய இன மக்களை பாதுகாக்க. எனவே நீங்கள் அனைவரும் நம்முடைய வேட்பாளர் மேனகாவுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.