சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்பது தி.மு.க.- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்பது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்பது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்-அமைச்சர் பிரசாரம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கைசின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் அவர் ஈரோட்டின் பல்வேறு பகுதிகளிலும் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.
அவர் காலையில் சம்பத்நகர், கருங்கல்பாளையம் காந்தி சிலை, பி.பி.அக்ரகாரம் பகுதிகளிலும், மாலையில் முனிசிபல் காலனி கருணாநிதி சிலை, பெரியார் நகர் பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
பி.பி.அக்ரகாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டார்.
வெற்றி உறுதி
அப்போது அவர் கூறியதாவது:-
நமது கூட்டணியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி உறுதியாகி விட்டது. வெற்றி உறுதி என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள். கை சின்னத்துக்கு ஓட்டுப்போடவேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற வேண்டும் என்பது உங்களால் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் நான் கேட்பது அவரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் (காப்புத்தொகை) இழக்கச்செய்யவேண்டும். செய்வீர்களா? (செய்வோம் என்று மக்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள்). நிச்சயமாக, உறுதியாக நீங்கள் செய்வீர்கள்.
காவல் அரண்
நான் இந்த தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வரவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ஏன் வரவில்லை. எதற்காக வரவில்லை என்று நீங்கள் உரிமையாக கேட்பீர்கள் என்பதால் நான் நேரடியாக உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன்.
நான் இங்கே உங்களை உற்றுப்பார்க்கிறபோது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் இருக்கிறீர்கள். இந்தபகுதி சிறுபான்மை மக்களும், அருந்ததியர் மக்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகும். கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதெல்லாம், சிறுபான்மை மக்களுக்கு பக்கபலமாக இருந்தார். இப்போதும் அது தொடர்கிறது. சிறுபான்மை மக்களுக்கு காவல் அரணாக இருந்து வருவது தி.முக.
பொய் பிரசாரம்
ஆனால், சிறுபான்மை மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்த அ.தி.மு.க. இன்று தேர்தலுக்காக தாங்கள் பல திட்டங்கள் நிறைவேற்றியதாக பொய் பிரசாரங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதை மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.
குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியவர்கள் மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியின் பிரதமர் மோடியின் ஆட்சி. அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது அ.தி.மு.க.வின் 10 ராஜ்யசபா எம்.பி.க்கள் முழுமையாக ஆதரித்து ஓட்டுப்போட்டனர். அதனால் அந்த சட்டம் நிறைவேறியது. ஆனால், அந்த சட்டத்தை தொடக்கத்திலேயே எதிர்த்தவர்கள் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள். குடியுரிமை சட்டத்தை ஆதரித்து ஓட்டுப்போட்ட அ.தி.மு.க.வுக்கு இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்ட வேண்டும். கை சின்னத்துக்கு நீங்கள் வாக்களிப்பீர்கள் எ்னறு உறுதியாக உங்களை நம்புகிறேன்.
மக்கள் உரிமைக்காக
குடியுரிமை சட்டத்தை தி.மு.க. கூட்டணி கட்சிகள் முழுமையாக எதிர்த்ததுடன், சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையொப்பங்கள் வாங்கி ஜனாதிபதியிடம் ஒப்படைத்தோம். ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் உரிமைக்காக பாடுபடும் பேரியக்கம் தி.மு.க.
இங்கு தோல் பதனிடும் தொழில் பெரிய அளவில் நடக்கிறது. தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் ஈரோடு முக்கிய பகுதியாக உள்ளது. இதனால் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தோல் தொழிலில் ரூ.20 ஆயிரம் கோடி வர்த்தகம் மற்றும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அருந்ததியர்
இதுபோல் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது தலைவர் கருணாநிதி முடிவு செய்து, அதற்கான கோப்புகளை தயார் செய்தார். அந்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் நாள் வந்தபோது, திடீரென்று தலைவருக்கு உடல் நல பிரச்சினை ஏற்பட்டது. அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்து, கட்டாய ஓய்வில் ஆஸ்பத்திரியில் இருந்தார். மசோதா தாக்கல் செய்யும் நாளில் அவர் சட்டமன்றத்துக்கு வரவேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே அப்போது துணை முதல்-அமைச்சராக இருந்த என்னை தலைவர் அழைத்தார். அருந்ததியர்களுக்கான 3 சதவீதம் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். அதை சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசச்சொன்னார். அந்த மசோதா முழுமனதுடன் சட்டப்பேரவையில் நிறைவேறியது. அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீட்டு மசோதாவை உருவாக்கியது தி.மு.க. தலைவர் கருணாநிதி. ஆனால், அதை சட்டப்பேரவையில் முன்மொழியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த இடஒதுக்கீட்டினால் இன்று அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து உள்ளனர். டாக்டர்கள், என்ஜினீயர்கள் பலரும் உருவாக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு சிறுபான்மையினர், அருந்ததியினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள் என்று அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதுதான் தி.மு.க. ஆட்சி.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.