காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல்
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நாளை(சனிக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி கிணத்துக்கடவு பகுதியில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 4 பேர் போட்டியிடுகின்றனர். இதையொட்டி நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி பகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், குருநல்லிபாளையம் ஊராட்சியில் ஒரு வாக்குச்சாவடியும் என மொத்தம் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஓட்டுப்பெட்டிகள்
இதற்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் மற்றும் வாக்கு சீட்டு உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேவையான முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கும் வகையில் முழு கவச உடை அனுப்பப்பட்டது. இந்த பணிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி, வட்டார தேர்தல் பார்வையாளர் பாஸ்கரன் பார்வையிட்டனர். கடைசி ஒரு மணி நேரம்(அதாவது 5 மணி முதல் 6 மணி வரை) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க ஒதுக்கப்பட்டு உள்ளது.