சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை; அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்
x

சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

வீட்டுமனை பட்டா

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி சென்னிமலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தாசில்தார் சதீஷ்குமார், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.பிரபு, பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புறவழிச்சாலை

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பசுவபட்டி ஊராட்சியை சேர்ந்த 20 பயனாளிகளுக்கும், எக்கட்டாம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த 492 பயனாளிகளுக்கும், முருங்கத்தொழுவு ஊராட்சியை சேர்ந்த 135 பயனாளிகளுக்கும் என மொத்தம் 647 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, 'சென்னிமலை பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ரூ.480 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னிமலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்' என்றார்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகம்

பின்னர் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை நில வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார். சென்னிமலை அருகே புதுப்பாளையம் ஊராட்சியில் இருந்து முகாசிப்பிடாரியூர் ஊராட்சியில் உள்ள 1010 நெசவாளர் காலனி பகுதிக்கு ரூ.1 கோடியே 88 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் குடிநீர் வழங்கும் பணியையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர் பாபு, குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம், குமாரவலசு ஊராட்சி தலைவர் வி.பி.இளங்கோ, முகாசிபிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஷ் என்கிற சுப்பிரமணியம், வார்டு உறுப்பினர்கள், சென்னிமலை கிழக்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் சென்னிமலை கிழக்கு, மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு

கோபி கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் தலைமை சுத்திகரிப்பு நிலையம் பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பகுதியில் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Next Story