ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்


ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்
x

கரூரில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

கரூர்

ஆபத்தை ஏற்படுத்தும்

பெரும்பாலான தெருக்களில் மாநகராட்சி தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ மாநகராட்சியே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும் கூட ஏற்படுத்தி விடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டு செல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது.

கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டு செல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டு செல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர். இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கேபிள் டி.வி. ஒயர்கள்

கரூரை சேர்ந்த ரவி:- கரூர் ஆண்டாங்கோவில், தாந்தோணிமலை, கோதூர் ரோடு, வெங்கமேடு ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான கேபிள் டி.வி. ஒயர்கள் சாலையோர மின்கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு உள்ளன. இதில், சில ஒயர்கள் ஆபத்தான முறையில் கீழே தொங்கி கொண்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒயர்கள் தொங்கி கொண்டு இருப்பதை தெரியாமல் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கவனித்து ஒழுங்குபடுத்துவதோடு, சரியான முறையில் ஒயர்களை கொண்டு செல்ல ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல்

வேலாயுதம்பாளையம் முல்லை நகரை சேர்ந்த சண்முகம்:- தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது அனைத்து வீடுகளிலும் தொலைபேசி, டி.வி. கணினி உள்ளிட்டவைகள் உள்ளன. இணையதளம் உள்பட சில வசதிகளை வழங்குவதற்காக இந்த கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டாலும், பாதுகாப்பாக அமைக்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக சாலைகளில் தோண்டப்பட்ட குழிகளில் ஒயர்களை பதித்துவிட்டு அதனை சரிவர மூடாமல் சென்று விடுகிறார்கள். இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் சிறுவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் வீடுகளுக்கு முன்பு கேபிள் ஒயர்கள் தொங்கி அலங்கோலமாகவும் காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை தரும் வகையில் கேபிள் ஒயர்கள் தொங்குவதையும் பார்க்க முடிகிறது. எனவே, ஆங்காங்கே அலங்கோலமாக காட்சி அளிக்கும் கேபிள்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மின்வாரிய ஊழியர்கள் அவதி

தோகைமலை அருகே மேலவெளியூரை சேர்ந்த ஜெகநாதன்:- தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேபிள் ஒயர்கள் கையெட்டும் தொலைவில் தான் உள்ளன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் மின்கம்பங்களில் கேபிள் ஒயர்கள் அதிகளவில் கட்டப்பட்டு உள்ளதால் மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பில் ஏற்பட்ட பழுதை நீக்கம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள ஒயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான நிலையில் தொங்கி கொண்டு இருக்கும் ஒயர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிக்கடி விபத்து

புகழூரை சேர்ந்த வக்கீல் ரவி:- தமிழகம் முழுவதும் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கேபிள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள மின் கம்பங்கள், தென்னை, பனை உள்ளிட்ட பல்வேறு மரங்களில் கேபிள் ஒயர்களை ஆபரேட்டர்கள் கட்டி அதன் வழியாக கொண்டு சென்று ஒவ்வொரு வீடுகளுக்கும் இணைப்பு கொடுக்கின்றன. சில நேரங்களில் கேபிள் ஒயர்கள் சாலையின் குறுக்கே தொங்கிக்கொண்டு இருக்கின்றன. இதன்காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது உள்ள நடைமுறைப்படி கேபிள் ஆபரேட்டர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. தமிழக அரசு கேபிள் டி.வி. ஒயர்களை முறையாக கொண்டு சென்று இணைப்புகள் கொடுக்கும் வகையில் சட்டத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story