போலி நுகர்வோர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


போலி நுகர்வோர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x

போலி நுகர்வோர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

அரியலூர்

அரியலூரில் வக்கீல்கள் சங்க கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடந்தது. இதில் தன்னார்வ நுகர்வோர் சங்கங்கள் நேரடியாக நுகர்வோர்களுக்காக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதேபோல் மாவட்ட கலெக்டர் 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தும் நுகர்வோர் பாதுகாப்பு ஆய்வு கூட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். கடந்த 2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் 2017-ம் ஆண்டில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழங்கிய உத்தரவிலும் அறக்கட்டளைகளாக செயல்படும் அமைப்புகள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் அல்ல என கூறப்பட்டுள்ளது. சங்கங்கள் சட்டம் அல்லது நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள் மட்டுமே தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் என்று இந்த தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாத முதல் வாரத்தில் 112 வக்கீல்கள் கையொப்பம் செய்து அறக்கட்டளையாக பதிவு செய்துள்ள நுகர்வோர் அமைப்புகளை தன்னார்வ நுகர்வோர் சங்கங்களுக்கான கூட்டங்களுக்கு அழைக்க கூடாது என்று அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பம் செய்திருந்தனர். தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் எனக் கூறிக்கொண்டு தனி நபர் ஒருவர் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டு வருகிறார் என்றும், இதனால் மாவட்டத்தில் அறக்கட்டளையாக பதிவு செய்துகொண்டு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு என தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அறக்கட்டளைகள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட பார் அசோசியேஷன் மற்றும் மாவட்ட அட்வகேட் அசோஷியேஷன் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற பெயரில் வர்த்தக நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதும் அதன் பெயரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட வேண்டும் என்று வக்கீல்கள் சங்கங்கள் அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள விண்ணப்பத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story