பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணம் பறிப்பு
செல்போனில் கவர்ச்சியான குறுந்தகவல் அனுப்பி பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அஞ்சுகிராமம்:
செல்போனில் கவர்ச்சியான குறுந்தகவல் அனுப்பி பயிற்சி போதகரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து செல்போன், பணத்தை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கவர்ச்சி குறுந்தகவலை அனுப்பி...
பறக்கை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 27 வயதுடைய பயிற்சி போதகர் உள்ளார். திருமணமான இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு இறையியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயிற்சி போதகரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. பின்னர் அவரும் அந்த எண்ணிற்கு தனது நண்பர்கள் தான் அனுப்பியுள்ளனர் என பதில் அனுப்பி உள்ளார். மீண்டும் அந்த எண்ணில் இருந்து உங்களை நேரில் பார்க்க வேண்டும் என கவர்ச்சிகரமான குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பயிற்சி போதகர் குறிப்பிட்ட இடமான மயிலாடி புதூருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை மயிலாடிபுதூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 20), அஜய் (20), பெருமாள் சுனில் (19) பிரதீப் (20) ஆகிய 4 பேர் மடக்கியுள்ளனர்.
பணம் பறிப்பு
பின்னர் திடீரென அரிவாளை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,800-ஐ பறித்தனர். தொடர்ந்து இந்த விஷயத்தை வெளியே யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பயிற்சி போதகர் இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார், அஜய் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
பயிற்சி போதகருக்கு கவர்ச்சி குறுந்தகவல் அனுப்பி அவரை குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைத்து பணம், செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.