பணம் கிடைக்காதவர்களுக்கு கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையம்


பணம் கிடைக்காதவர்களுக்கு கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையம்
x
திருப்பூர்


கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பணம் கிடைக்கப்பெறாத பெண்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களுக்கு நேற்று படையெடுத்தனர். விண்ணப்பத்தின் நிலையை அறியும் வகையில் உதவி மையங்கள் செயல்பட்டன. சர்வர் தாமதத்தால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

மகளிர் உரிமைத்திட்டம்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கடந்த 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு தெரிவித்த தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் பலரின் வங்கிக்கணக்குக்கு பணம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பணம் கிடைக்காதவர்களுக்கு அதற்கான காரணத்தை அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக கடந்த 18-ந் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் https://kmut.tn.gov.in என்ற இணையதளத்துகுள் சென்று பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டால் செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை வைத்து உள்நுழைந்து பணம் வழங்கப்படாததற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகளும் இணையதளம் மூலமாக சரிபார்க்க வசதி செய்யப்பட்டு இருந்தது.

படையெடுத்த பெண்கள்

இந்தநிலையில் நேற்று காலை முதல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண்கள் படையெடுத்தனர். இதற்காக உதவி மையம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டது. 10 ஊழியர்கள் தனியாக நியமிக்கப்பட்டு குடும்ப தலைவிகள் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கொடுத்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர். ஒரேநேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் மிகவும் தாமதமாக செயல்பட்டது.

இதனால் சரிபார்க்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் கணினியில் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டனர். சர்வர் தாமதமாக இருந்ததால் நீண்டநேரம் பெண்கள் காத்திருந்தனர்.

குறைந்தபட்ச வைப்பு தொகை

இதுபோல் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகம், தெற்கு தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பெண்கள் விவரங்களை கேட்க வசதி செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் இணையதளத்தில் ஆதார் எண்ணை உள்ளீடு செய்தால் ஓ.டி.பி. வரவில்லை. இதனால் இ-சேவை மையங்களுக்கும் சென்று சரிபார்த்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 செலுத்தியதும் வங்கி அந்த பணத்தை பிடித்துக்கொள்கிறது. அதுபோன்ற வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பாமல் இருக்கிறார்கள். அதுபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் இணைக்காதவர்களுக்கும் பணம் அனுப்பாமல் உள்ளது. இதுபோன்ற குறைகளை அறிந்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம். சர்வர் தாமதமாக இருப்பதால் மக்களுக்கு விரைந்து சரிபார்க்க முடியவில்லை' என்றனர்.


Next Story