விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு
ராமநாதபுரம் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் மருந்து தெளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராகவன் தலைமை தாங்கினார். வேளாண் இணை இயக்குனர்கள் கண்ணையா, சேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோட்டக்கலை விஞ்ஞானி டாக்டர் பாலசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ட்ரோன் கருவி மூலம் மருந்து தெளித்தல், விதைகள் தூவுதல் போன்ற பல்வேறு பணிகள் குறைத்த செயல்முறை விளக்கம் செய்து காட்டப் பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தொழில்நுட்பம் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதிக விளைச்சல்
இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன் கூறிய தாவது:- விவசாயத்தில் ட்ரோனின் பயன்பாடு அடுத்த தொழில்நுட்ப அலையாகும். விவசாயத்தில் ட்ரோன்களை பயன் படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றங்களை சமாளித்து எதிர்கால வேளாண் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடிகிறது.
ட்ரோன் பயன்படுத்துவதால் மருந்து கலவை நீர்த்துளிகள் பயிர்களில் இலைகளின் மீது நேரடியாக பாய்வதால் சராசரியை விட அதிக விளைச்சல் கிடைக்கிறது. மேலும், 90 சதவீத தண்ணீர் உபயோகத்தையும், 40 சதவீத பூச்சிக்கொல்லி மருந்தின் அளவையும் கணிசமாக குறைக்க முடிகிறது. இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மரங்கள், செடிகள், பந்தல் கொடிகளுக்கும் மருந்து தெளிக்கலாம்.
மருந்து
சவாலான மலைச்சரிவுகள், மனிதர்கள் நுழைய முடியாத பகுதிகளில் குறிப்பாக கரும்பு. குச்சிகிழங்கு விளையும் இடங்களில் ட்ரோன் மூலம் விரைவில் மருந்து தெளிக்கலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை ட்ரோன் மூலமும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கரிலும் மருந்து தெளிக்கலாம். நிலத்தில் ரசாயனங்களை சரியான அளவு முறையாக பயன்படுத்துவதால் விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைகிறது. லாபம் அதிகரிக்கிறது.
வேலையாட்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் மருந்து தெளிக்க முடியாத நிலையை இந்த ட்ரோன் தொழில்நுட்பம் நீக்குகிறது. தாவரங்களின்மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. மாவட்டத்தில் முதன் முறையாக இந்த தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனை விவசாயிகள் அறிந்து கொண்டு தங்களின் விவசாய நிலங்களில் பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.