முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்


முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 7 July 2023 2:15 AM IST (Updated: 7 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

போிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர்

போிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


ஆய்வு கூட்டம்


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஈராண்டு (2018-2019, 2020-2021) ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான எஸ்.கே.பிரபாகர் தலைமை தாங்கி பேசினார்.


முன்னதாக அவர் வருவாய்த்துறை பிரிவு அலுவலகங்கள், இசேவை மையம், பதிவறை உள்ளிட்ட அலுவலகங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தொடா்ந்து வடவள்ளியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணி நியமன ஆணையை வழங்கினார்.


பின்னர் வருவாய் நிர்வாக ஆணையாளர் எஸ்.கே.பிரபாகர் பேசியதாவது:-


விரைந்து தீர்வு காண வேண்டும்


முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வருவாய்த்துறையில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும். மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் கடந்த 4-ந் தேதி வரை 27,409 மனுக்கள் பெறப்பட்டு, 22,767 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மீதமுள்ள 4,642 மனுக்கள் மீது உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களில் இந்த ஆண்டில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயங்களில் 4,615 மனுக்கள் பெறப்பட்டு, 3,333 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,282 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2022-2023 நிதியாண்டு மற்றும் ஜூலை 2023 வரை முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் கீழ் 20,480 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பேரிடர் கால முகாம்கள்

மேட்டுப்பாளையத்தில் 9 இடங்கள், பேரூரில் ஒரு இடம், ஆனைமலையில் ஒரு இடம், வால்பாறையில் 2 இடங்கள் ஆகிய 13 இடங்கள் மழையினால் சிறிதளவு பாதிக்கப்படக்கூடிய இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

பேரிடர் காலங்களில் விரைந்து செயல்படுவதற்கு தொடர்புடைய அலுவலர்கள், பணியாளர்களை எளிதில் தொடர்புகொள்ளும் வகையில், தொலைபேசி எண்கள், விவரங்களையும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முகாம்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


இவ்வாறு அவர் பேசினார்.


Next Story