சேதமடைந்த மரக்கட்டை பூங்கா பராமரிக்கப்படுமா?


சேதமடைந்த மரக்கட்டை பூங்கா பராமரிக்கப்படுமா?
x

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கும் மரக்கட்டை பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடலூர்


கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியதில் கடலூர் மாவட்ட கடற்கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலூரில் 1 பனை உயரத்துக்கு எழுந்து வந்த ராட்சத அலையால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் மாவட்டத்தில் 610 பேர் உயிரிழந்தனர். இது தவிர மீன்பிடி படகுகள், வலைகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

இதையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் மாநகர மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கடலூருக்கு வந்து சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, நிதி உதவி செய்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், குத்து சண்டை வீரர் மைக் டைசன், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்ட பிரபலங்களும் கடலூரில் முகாமிட்டு பல்வேறு உதவிகளை செய்தனர்.

மரக்கட்டையால் பூங்கா

அதன்படி அமெரிக்க நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது கடலூர் சில்வர் பீச்சில் சுனாமியால் உடைந்து கிடந்த ராட்டினங்கள், சறுக்கு, ராட்டினம், ஊஞ்சல் என சிறுவர்கள் விளையாடும் பூங்கா அனைத்தும் சேதமடைந்து கிடந்ததை, பார்வையிட்ட அவர்கள், கடலூரில் மரக்கட்டையால் ஆன அழகிய பூங்கா ஒன்று அமைத்து தருவதாக கூறினர்.

அதையடுத்து அந்த நிறுவனம், அப்போதைய நகராட்சி நிர்வாக ஒத்துழைப்புடன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நடேசன் நகரில் அந்த மரக்கட்டையால் ஆன பூங்காவை அமைத்தனர். இதற்காக அந்த நிறுவனம் ரூ.10 லட்சம் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் திரட்டிய ரூ.1½ லட்சம் நிதி ஆகியவற்றை கொண்டு இந்த மரக்கட்டையால் ஆன சிறுவர்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டது.

சிறுவர்கள் உற்சாகம்

கடலூர் மாவட்டத்திலேயே மரக்கட்டையால் ஆன பூங்கா கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடேசன் நகரில் தான் அமைக்கப்பட்டது. இதில் சறுக்கு பலகை, ஊஞ்சல் என சிறுவர்கள் விளையாட்டு சாதனங்கள் அனைத்தும் தேக்கு மரப்பலகையால் உருவாக்கப்பட்டது. இந்த பூங்கா முழுமையாக அமைக்கப்பட்டு கடந்த 21.1.2007 அன்று திறக்கப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவர் விளை யாட்டு பூங்காவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.

அதன்பிறகு பூங்காவை சுற்றிலும் நடைபாதை மற்றும் உயர் மின்கோபுர விளக்குகள் ரூ.3½ லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, இதன் திறப்பு விழா கடந்த 8.3.2008 அன்று நடந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலையிலும், மாலையிலும் இந்த நடைபாதையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து வந்தனர்.

சேதம்

ஆனால் நாளடையில் இந்த பூங்காவை பராமரிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் மரக்கட்டையால் ஆன ராட்டினங்கள் நாளடைவில் சேதமடைய ஆரம்பித்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். சிலர் உடைந்த பலகைகளையும் எடுத்து சென்று விட்டனர்.

இந்த மரக்கட்டையால் ஆன பூங்கா 35 ஆண்டுகள் அப்படியே இருக்கும் என்று அதை அமைத்த, வெளிநாட்டினர் தெரிவித்தனர். ஆனால் இந்த பூங்கா அமைக்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே பராமரிப்பின்றி சேதமடைந்து விட்டது. தற்போது அந்த பூங்காவில் உடைந்த மரக்கட்டைகள் மட்டும், அதில் சறுக்கு, ராட்டினங்கள் இருந்ததை நினைவு படுத்துகிறது. ஆகவே இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரமைக்க வேண்டும்

இது பற்றி பூங்கா மகாத்மாகாந்தி குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் செல்வகணபதி கூறுகையில், இந்த நடேசன்நகர் உள்பட 21 குடியிருப்புகளை நாங்கள் கவனித்து வருகிறோம். இங்கு தனியார் நிறுவனம் நடைபாதையுடன் கூடிய சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைத்து கொடுத்தது. மற்ற பூங்கா மாதிரி இல்லாமல் மரப்பலகையால், அதுவும் தேக்கு மரத்தில் சிறுவர் விளையாட்டு பூங்காவை அமைத்தனர்.

ஆனால் இந்த பூங்கா தொடர் மழை, தானே புயலால் சேதமடைந்து விட்டது. தற்போது மரப்பலகைகள் மட்டும் அடையாளமாக உள்ளது. அதை அகற்றி விட்டு புதிதாக பூங்கா அமைத்து தர வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இருக்கிறோம். அவர்களும் சீரமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். ஆகவே விரைவில் இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும் என்றார்.

சமூக விரோத செயல்

நடேசன்நகரை சேர்ந்த மோகன் கூறுகையில், இந்த பூங்கா ஒரு நல்ல நோக்கத்திற்காக அப்போதைய நகராட்சி நிர்வாகம், இந்த இடத்தை தேர்வு செய்து, தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் அமைத்து தந்தது. ஆனால் இப்போது பூங்கா எவ்வித பராமரிப்பும் இன்றி உள்ளது. சறுக்கு விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட பலகைகள் மட்டும் உடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. செடி, கொடிகளும் முளைத்து இருப்பதால், தற்போது அந்த பூங்காவுக்குள் யாரும் செல்வதில்லை. பன்றிகள், மாடுகள் உலா வருகின்றன. இதன் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வருவோர், இந்த பூங்காவுக்குள் நடைபயிற்சி செய்வதற்கும், சிறுவர்கள் விளையாடுவதற்கும் விரைவில் இந்த பூங்காவை சீரமைத்து கொடுத்தால் இப்பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

இதேபோல் மாநகர பகுதியில் சேதமடைந்த சிறுவர் விளையாட்டு பூங்காக்களை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story