'பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்-அமைச்சர் இப்படி பேசலாமா?' - அண்ணாமலை


பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்-அமைச்சர் இப்படி பேசலாமா? - அண்ணாமலை
x

பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்-அமைச்சர் அரசியல் நாடகம் நடத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.31,530 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மேடையில் இருக்கும் போதே பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இந்நிலையில் பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்-அமைச்சர் அரசியல் நாடகம் நடத்தியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில், "இந்தியாவின் ஒரு சாதாரண குடிமகனாகவும், பெருமை வாய்ந்த தமிழனாகவும், தமிழக முதல்-அமைச்சரின் மோசமான நடத்தையால் நான் வெட்கப்படுகிறேன். பிரதமராக தமிழகம் வந்தவர் பாஜக நிகழ்ச்சிக்காக வரவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை இழிவுப்படுத்தியுள்ளார்.

தற்போது, ​​கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பயனடைகின்றன. ஆனால் திமுக எப்போதாவது உண்மைகளை கவனிக்கிறதா? அவர்களுக்கு அரசியலில் மட்டுமே ஆர்வம். பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தின் மீது தனது பாசத்தை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். இன்றைய நிகழ்விலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அர்ப்ப அரசியல் மட்டுமே செய்தார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு என்ன தைரியத்தில் பிரதமரிடம் முதல்-அமைச்சர் கோரிக்கை வைக்கிறார். கச்சத்தீவை மீட்டுத்தர கோரிக்கை வைக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. எஸ்டி கவுன்சில் முடிவுகள் எப்பொழுதும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டவை என்பதை முதல்-அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். இழப்பீட்டிலும், ஜூலை 2022க்குப் பிறகு மீதி இழப்பீட்டை வழங்குவதற்கான விருப்பத்தை தமிழ்நாடு அரசாங்கம் எடுத்தது. சொன்னபடி, ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை செலுத்தப்படுகிறது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது விருப்பங்களை மட்டுமே முக்கியம் என நினைக்கிறார். முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story