மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி சேலத்தில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டிசேலத்தில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.
சேலம்
மணிப்பூரில் நடந்த மத கலவரத்தில் ஏராளமான கிறிஸ்தவ பேராலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு அமைதி நிலவ வேண்டியும், மனித நேயம் மலரவும் சேலம் மறைமாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து நேற்று மாலை அமைதி ஊர்வலத்தை நடத்தினர். சேலம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு குழந்தை ஏசு பேராலயத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராஜ் செல்வம், குழந்தை ஏசு பேராலயத்தின் பங்குதந்தை ஜோசப் லாசர், மறைமாவட்ட மக்கள் தொடர்பாளர் ஜெய் பெர்னாட் ஜோசப் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். இதனை தொடர்ந்து குழந்தை ஏசு பேராலயத்தில் அனைவரும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.