மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கையில் தலையிட முடியாது -ஐகோர்ட்டு


மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கையில் தலையிட முடியாது -ஐகோர்ட்டு
x

மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கும் அரசின் கொள்கையில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மாநில அரசு ஒதுக்கீடாகவும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு மாநில அரசுக்கு வழங்கப்படும் 50 சதவீத ஒதுக்கீட்டில், தமிழகத்தில் உள் ஒதுக்கீடாக 50 சதவீதம் அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

மீதமுள்ள இடங்களில் தனியார் டாக்டர்களுடன் போட்டியிடும் அரசு டாக்டர்கள் தொலைதூர, கடினமான மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் பணியாற்றினால் அவர்களுக்கு அதிகபட்சமாக 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

அரசு பணியில் உள்ள டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இரட்டை சலுகையாக 50 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஊக்க மதிப்பெண் வழங்குவது சட்டவிரோதமானது என்றும், இதனால் தங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்றும் கூறி தனியார் டாக்டர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு டாக்டர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

ஏற்புடையதல்ல

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு டாக்டர்களுக்கு வேறு எந்த மாநிலத்திலும் 30 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்காத நிலையில் தமிழகத்தில் மட்டும் வழங்கப்படுவதால் அரசின் கொள்கை முடிவு சட்டவிரோதமானது மட்டுமல்ல அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது என்ற மனுதாரர்கள் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.

அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதேபோன்று தமிழகத்தில் 2 ஆயிரத்து 266 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 330 அரசு ஆஸ்பத்திரிகளும் உள்ளன.

தலையிட முடியாது

மருத்துவ சேவை எங்கு அதிகமாக தேவையோ அங்கு பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்குவதில் எந்த தவறும் இல்லை. ஏனெனில் அரசு டாக்டர்கள் தங்களது பணிக்காலம் முழுவதையும் அரசு ஆஸ்பத்திரிகளிலேயே செலவிடுகின்றனர்.

அத்துடன் தொலைதூர, கடினமான மற்றும் மலைப்பகுதி கிராமங்களில் அரசு டாக்டர்கள் பணியாற்றுவதை ஊக்கப்படுத்தும் வகையிலேயே இந்த ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்த கொள்கை முடிவில் தலையிட முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story