தோணி கவிழ்ந்து விபத்து; காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்பு

தூத்துக்குடி அருகே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
தூத்துக்குடி அருகே தோணி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.
தோணி மூழ்கியது
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு, லட்சத்தீவு போன்ற இடங்களுக்கு தோணி மூலம் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 28-ந் தேதி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து ரைமண்ட் என்பவருக்கு சொந்தமான தோணி சுமார் 250 டன் கட்டுமான பொருட்கள், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றது.
இந்த தோணியில் தூத்துக்குடியை சேர்ந்த சகாய கிளிபட், லூர்து தொம்மை, ஆண்டன் ராஜேந்திரன், மில்டன், ஆண்டன் வாஸ்டின், லிங்கராஜ், ஸ்டான்லி ஆகிய 7 தொழிலாளர்கள் இருந்தனர். இந்த தோணி நேற்று முன்தினம் அதிகாலையில் மாலத்தீவில் இருந்து 60 கடல்மைல் தொலைவில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென கடும் சூறாவளி காற்று வீசியது. இதில் தோணிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் தோணி கடலுக்குள் மூழ்கியது.
மீட்பு
இதனை தெடர்ந்து தோணியில் இருந்த 7 தொழிலாளர்களும் கடலில் தத்தளித்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மாலத்தீவு நோக்கி ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டு இருந்தது. உடனடியாக கப்பலில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எதிர்பாராத விதமாக மீட்கும் போது தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டான்லி (59) என்பவர் தவறி கடலில் விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. மற்ற 6 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடலில் விழுந்த ஸ்டான்லி சூறாவளியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
இதைத் தொடர்ந்து கப்பலில் இருந்தவர்கள் ஸ்டான்லியின் உடலையும் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மாலத்தீவுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஸ்டான்லியின் உடல் மாலத்தீவில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து 6 தொழிலாளர்களையும், இறந்த ஸ்டாலியின் உடலையும் தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக தூத்துக்குடி கோஸ்டல் தோணி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரின்ஸ்டன் பர்னாண்டோ, செயலாளர் லசிங்டன் பர்னாண்டோ, இணை செயலாளர் கிஷோர் மற்றம் நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






