நல்ல விளைச்சல் இருந்தும் பாகற்காய் விலை வீழ்ச்சி - கிலோ ரூ.8-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை
நல்ல விளைச்சல் இருந்தும் பாகற்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.8-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஆனைமலை
நல்ல விளைச்சல் இருந்தும் பாகற்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. கிலோ ரூ.8-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பந்தல் காய்கறிகள்
ஆனைமலை ஒன்றிய பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், தம்மம்பதி, சரளைப்பதி, காளியாபுரம், சின்னப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் பாகற்காய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கன்காய் உள்பட பந்தல் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு இருந்ததால், தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. மேலும் கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான அளவில் நீர் உள்ளது. இதை பயன்படுத்தி சாகுபடி செய்ததால், பந்தல் காய்கறிகளில் நல்ல விளைச்சலும் கிடைத்து இருக்கிறது. ஆனால் உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கிலோ ரூ.8-க்கு விற்பனை
இதுகுறித்து ஆனைமலை விவசாயிகள் கூறியதாவது:-
ஆனைமலை ஒன்றிய பகுதியில் பந்தல் காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கிருந்து காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக பாகற்காய் அதிகளவில் சிப்ஸ் தயாரிக்க கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பாகற்காய் சாகுபடிக்கு ஒரு முறை பந்தல் அமைத்தால், அடுத்த 7 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு தொழிலாளர் கூலி, உரம், விதை போன்றவற்றிற்கு ரூ.1½ லட்சம் வரை செலவாகும். நல்ல காலநிலை இருந்தால் 10 டன் முதல் 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும். ஆனால் தற்போது போதிய விலை கிடைக்கவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையான பாகற்காய், தற்போது ரூ.8 முதல் ரூ.13 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச விலை
இதனால் பாகற்காய் பறிப்பதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை, உரம் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு, சாம்பல் நோய் தாக்குதல் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் வேளாண்மைத்துறையில் இருந்து பந்தல் மற்றும் சொட்டுநீர் பாசனத்துக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் உரத்திற்கு மானியம் வழங்கப்படுவதில்லை. எனவே பந்தல் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.