ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு


ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
x

திருமானூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர்

ஏரி ஆக்கிரமிப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட வெற்றியூர் விரகாலூர் கிராம மக்கள் கடந்த வாரம் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் விரகாலூர் கிராமத்தில் உள்ள நீர்நிலையான கசிவு நீர் ஏரி ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை அகற்றி கரை அமைத்து தர வேண்டும் என்றும், மேலும் கரைமேல் மரக்கன்றுகள் நட வேண்டும். அந்தப்பகுதி மயானம் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அந்தப்பகுதியின் ஏரி ஆக்கிரமிப்பு, மயானம் ஆக்கிரமிப்பு, வாரி ஓடை என அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அளவீடு செய்து கரை அமைக்கும் பணியில் வருவாய் துறையினர் நேற்று தொடங்கினர்.

பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு

இந்தநிலையில் அதே பஞ்சாயத்துக்குட்பட்ட திருப்பெயர் கிராம காலனி மக்கள் எங்களுடைய பட்டா நிலத்தில் எதற்காக பொக்லைன் கொண்டு கரை அமைக்கிறீர்கள். நாங்கள் மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகிறோம். இதற்கு பட்டா எங்களிடம் உள்ளது. அதனால் எங்களுடைய வயலை ஆக்கிரமிக்கின்ற பெயரில் அபகரிக்கக்கூடாது. எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும். நாங்கள் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்து வந்த நிலத்தை நாங்கள் விட்டுத்தர முடியாது என கூறி பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உங்களுடைய கோரிக்கையை மேல் அதிகாரிகளிடம் தெரிவிக்கிறோம். அதுவரை நீங்கள் அமைதி காக்க வேண்டும்.

பணி நிறுத்தம்

தற்போதைக்கு பொக்லைன் எந்திரம் மூலம் கரையமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படும். அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கரை அமைக்கும் பணி தொடங்கப்படும். அதுவரை இருதரப்பும் அமைதியாக இருங்கள் என கூறினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story