படப்பை அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு


படப்பை அருகே அரசு பஸ் சிறைபிடிப்பு
x

படப்பை அருகே அரசு பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

சிறைபிடிப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த செரப்பனஞ்சேரி ஊராட்சியில் நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் நலன் கருதி நாவலூர் குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து தாம்பரம் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பஸ்சை நாட்டரசன்பட்டு ஊராட்சியில் இருந்து தாம்பரம் வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது. அந்த பஸ் நேற்று நாட்டரன்பட்டு கிராமத்தில் இருந்து புறப்பட்டு நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது. அப்போது குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் அந்த வழியாக வந்த பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

சமரச பேச்சுவார்த்தை

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

நாவலூர் குடிசைப்பகுதி மாற்று வாரிய பகுதியிலிருந்து தாம்பரம் வரை சென்று கொண்டிருந்த 79 எ என்ற பஸ்சை 79 என் என்று மாற்றி நாட்டரசம்பட்டு கிராமத்தில் இருந்து இயக்கப்படுவது ஏன்? எங்கள் பகுதிக்கு என விடப்பட்ட பஸ்சை ஏன் மாற்றி இயக்கப்படுகிறது. நாட்டரசன் பட்டு கிராமத்தில் இருந்து பஸ் விடுவதற்கு எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் நாட்டரசன் பட்டு கிராமத்தில் இருந்து தாம்பரத்திற்கு வேறொரு பஸ்சை இயக்குங்கள். அதை விட்டுவிட்டு எங்கள் பகுதிக்கு விட்ட பஸ்சை புதிய வழித்தடத்தில் இயக்குவது போல் இயக்குவது ஏன் என சரமாரி கேள்வி கேட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து அரசு பஸ் புறப்பட்டு சென்றது.


Next Story