கார் புரோக்கர் அடித்து கொலை
கோவை வடவள்ளியில் பழைய கார்களை வாங்கி விற்கும் புரோக்கரை அடித்து கொலை செய்த வக்கீல் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடவள்ளி
கோவை வடவள்ளியில் பழைய கார்களை வாங்கி விற்கும் புரோக்கரை அடித்து கொலை செய்த வக்கீல் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கார் புரோக்கர்
கோவை வடவள்ளி அருகே சோமையம்பாளையத்தை சேர்ந்த வர் சிரஞ்சீவி (வயது 26). இவர் பழைய கார்களை வாங்கி விற்பது, கார் அடகுக்கு வாங்கும் தொழில் செய்து வந்தார். கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் அஸ்வின் (39). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வினிடம் ஒரு நபர், காரை அடகு வைத்து பணம் தரும்படி கேட்டதாக தெரிகிறது. அதன்பேரில் அஸ்வினும் அந்த காரை வாங்கி, சிரஞ்சீவியிடம் கொடுத்தார். சிரஞ்சீவி அந்த காரை ரூ.3 லட்சத்திற்கு விற்றுவிட்டார்.
ரூ.3 லட்சத்துக்கு விற்றார்
இந்நிலையில் அஸ்வினிடம் காரை கொடுத்த நபர் மீண்டும் வந்து தனது கார் வேண்டும் என்று கேட்டு உள்ளார். உடனே அஸ்வின், சிரஞ்சீவியை சந்தித்து காரை திருப்பி தரும்படி கேட்டார். அதற்கு அவர் காரை விற்று விட்டதாக தெரிவித்தார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அஸ்வின் நான் உன்னிடம் அடகுக்கு தானே காரை கொடுத்தேன். நீ எப்படி விற்கலாம் என்று கேட்டு உள்ளார்.
இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அவர்கள் 2 பேருக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கோவை வந்தனர்
இதற்கிடையே காரை கொடுத்த நபர் தொடர்ந்து போன் செய்து அஸ்வினிடம் காரை கேட்டு வந்தார். இதனால் கவலை அடைந்த அஸ்வின், அடகு பிடித்த காரை சிரஞ்சீவி விற்றது குறித்து தனது நண்பர்களான நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்த டிரைவர் கண்ணன் (26), நாங்குநேரியை சேர்ந்த வக்கீல் முத்தையா (வயது 33), வேடப்பட்டியை சேர்ந்த கார் புரோக்கர் ஆனந்தபாபு (49) ஆகியோரிடம் கூறினார்.
உடனே அவர்கள் கோவைக்கு புறப்பட்டு வந்தனர். இதையடுத்து அஸ்வின், கடந்த 22-ந் தேதி இரவு சிரஞ்சீவியை தொடர்பு கொண்டு உன்னிடம் பேச வேண்டும். மருதமலை ரோட்டிற்கு வா என அழைத்தார். அதை நம்பி சிரஞ்சீவியும் அங்கு சென்றார்.
சரமாரி தாக்குதல்
அப்போது அங்கு அஸ்வின் தனது நண்பர்களுடன் நின்றார். சிரஞ்சீவி வந்ததும் காரை விற்றது குறித்து அஸ்வின் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அஸ்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து சிரஞ்சீவியை அங்கு கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அங்கேயே போட்டு விட்டு 4 பேரும் தப்பி சென்றனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்த சிரஞ்சீவியை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
4 பேர் கைது
இது குறித்து சிரஞ்சீவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் உள்பட 4 பேர் மீதும் வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிரஞ்சீவி நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் போலீசார் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
அதைத்தொடர்ந்து சிரஞ்சீவியை அடித்து கொலை செய்த வழக்கில் அஸ்வின், அவரது நண்பர்களான கண்ணன், வக்கீல் முத்தையா, ஆனந்தபாபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.








