மொபட், லாரி மீது கார் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி


மொபட், லாரி மீது கார் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி
x

மொபட், லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்

ஐ.டி. ஊழியர்

சென்னை அய்யப்பன் தாங்கல் அபர்ணா கிரேன் பகுதியை சேர்ந்த சிதம்பரத்தின் மகன் பார்வதிநாதன் (வயது 37). ஐ.டி. ஊழியர். இவர் தனது மனைவி தெய்வானை (33), மகன் சேதுராம் (6) மற்றும் விருகம்பாக்கத்தில் வசித்து வந்த தனது தாய் வசந்தா (68), அண்ணன் சேதுராமன் (43) ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள, நேற்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் சேதுராமன், தற்போது கோவில் திருவிழாவிற்காக, அங்கிருந்து வந்ததாக கூறப்படுகிறது. காரை பார்வதிநாதன் ஓட்டினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் தனியார் கல்லூரி அருகே நேற்று மதியம் 12 மணியளவில் அந்த கார் வந்தது.

மொபட் மீது மோதியது

அப்போது முன்னால் சென்ற மொபட் மீது எதிர்பாராதவிதமாக அந்த கார் மோதியது. இதில் பார்வதிநாதனின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிற்காமல் சென்று, முன்னால் என்ஜின் பழுதாகி சோப்பு லோடுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த வசந்தா மற்றும் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஒகளூர் கிழக்கு நத்தமேடு கிராமத்தை சேர்ந்த மர வியாபாரி கதிர்வேலு (71) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பார்வதிநாதன், தெய்வானை, சேதுராம், சேதுராமன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

3 பேர் சாவு

மேலும் பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து, நெடுஞ்சாலை ரோந்து போலீசாருடன் இணைந்து காரில் இருந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த வசந்தா, கதிர்வேலு ஆகியோரின் உடல்களை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் பார்வதிநாதனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

போலீசார் விசாரணை

மேலும் தெய்வானை, சேதுராம், சேதுராமன் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, தாளக்குடி வேம்படியான் தெருவை சேர்ந்த சண்முகத்திடம்(41) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மொபட் மீது மோதிய கார் நிற்காமல் சென்று லாரி மீது மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த 14-ந்தேதி இரவு இரும்பு உதிரிபாகங்களை ஏற்றி வந்த லாரியின் முகப்பு விளக்குகளை சரி செய்வதற்காக, அந்த லாரியை பெரம்பலூர் நான்கு ரோடு சாலையில் டிரைவர் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், அந்த லாரி மீது மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் தேவையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story