டிராக்டர் மீது கார் மோதல்; தம்பதி பலி
டிராக்டர் மீது கார் மோதியதில் தம்பதி உயிரிழந்தனர்.
கல்லக்குடி:
திருமணத்திற்கு சென்றனர்
திருச்சி வாஞ்சிநாதநகர், தீரன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 83). இவர் தனது மனைவி ஜெயலட்சுமி(81), இவரது உறவினர் நாகரத்தினத்தின் மனைவி ஆண்டாள்(87), மகன் பாண்டியன்(55), இவரது மனைவி கோமதி என்ற காமாட்சி(52) ஆகிய 5 பேரும் நேற்று காலை உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து அரியலூருக்கு தங்களது காரில் சென்றனர்.
பின்னர் மதியம் அவர்கள் அங்கிருந்து காரில் திருச்சி நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். கல்லக்குடி அருகே புள்ளம்பாடியை அடுத்துள்ள பெட்ரோல் நிலையம் அருகே அந்த கார் வந்தது. அதேநேரத்தில் புள்ளம்பாடியை சேர்ந்த ரவிச்சந்திரன்(53) என்பவர் தனது டிராக்டரில் சவுக்குமரம் ஏற்றி வந்தார்.
தம்பதி சாவு
அப்போது அந்த டிராக்டர் மீது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாண்டியன், கோமதி என்ற காமாட்சி, ஆண்டாள், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதற்கிடையே கார் மோதியதில் டிராக்டரின் டிப்பர் கவிழ்ந்து, அதில் இருந்த சவுக்கு கட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் லால்குடி இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் இறந்த கிருஷ்ணமூர்த்தி, ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.