லாரி மீது கார் மோதல்; தாய்-மகன் படுகாயம்
காவேரிப்பாக்கத்தில் லாரி மீது கார் மோதியதில் தாய்-மகன் படுகாயம் அடைந்தனர்.
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்டான்லிராஜ் (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து ஜெயஸ்டான்லிராஜ் தனது குடும்பத்தினரோடு வேலூர் நோக்கி காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கொண்டாபுரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியின் பின்பக்கத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் ஜெயஸ்டான்லி ராஜியின் மனைவி சந்தோஷ்கிரண் (34), மகன் யோகண்ணன் (1) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.