பயணிகள் ஆட்டோ மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி


பயணிகள் ஆட்டோ மீது கார் மோதி விபத்து  -  ஒருவர் பலி
x

திருமலைசமுத்திரம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வல்லம்,

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் அருகே பயணிகள் ஆட்டோ ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. ஆட்டோவை தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆட்டோவில் 3 பெண்கள் இருந்துள்ளனர்.

அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது திடீரென மோதியது. இதில் நிலை தடுமாறிய ஆட்டோ சாலையின் ஓரத்திலிருந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஆட்டோவின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோவில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story