வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்செங்கோட்டில் இருட்டு தேர் பவனி


வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு  திருச்செங்கோட்டில் இருட்டு தேர் பவனி
x

வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு திருச்செங்கோட்டில் இருட்டு தேர் பவனி

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு மலைக்கோவிலில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் நகருக்கு எழுந்தருளி தேரில் பவனி வரும் வைகாசி விசாக தேர்திருவிழா ஜூன் 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து அமாவாசை திதி தினத்தன்று புறப்பட்டு தேரில் ஏறி பவனி வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பாரம்பரியமாக அமாவாசை தின நடு இரவில் அம்மன் புறப்பாடு நடக்கும். அப்போது அனைத்து வீதி விளக்குகள், வீட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு இருக்கும். இதனால் இந்த தேரோட்டத்தை இருட்டு தேர் என பொதுமக்கள் அழைப்பதுண்டு. நாளடைவில் மருவி திருட்டு தேர் என அழைக்கப்பட்டது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் இந்த தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு உத்தரவால் இருளில் இழுக்கப்பட்ட அம்மன் தேர் மாலையில் வெளிச்சத்தில் இழுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ் பாபு வடம்பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், பெண்கள் கலந்து கொண்டு அம்மன் தேரை வடம் பிடித்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக வந்த தேர் மாலை நிலைசேர்ந்தது. முன்னதாக பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு கைலாசநாதர் கோவிலுக்கு சென்று அங்கிருந்து தேருக்கு எழுந்தருளினார். ேதர் பவனியையொட்டி 4 ரதவீதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. தேருக்கு பின்னால் தீயணைப்பு துறை அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வாகனம் வந்தது.


Next Story