கார்-லாரி மோதல்; 6 பேர் படுகாயம்


கார்-லாரி மோதல்; 6 பேர் படுகாயம்
x

வடமதுரை அருகே காரும், லாரியும் மோதிக்கொண்டதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

திருச்சியை அடுத்த பாத்திமாநகரை சேர்ந்தவர் விஜயகாந்த் (வயது 40). இவர் அதே பகுதியில் எண்ணெய் ஆலை நடத்தி வருகிறார். இவர் தனது உறவினர் ராஜேந்திரன் (50) என்பவருடன் ஒரு காரில் திண்டுக்கல்லிற்கு சென்று கொண்டிருந்தார். காரை விஜயகாந்த் ஓட்டினார். வடமதுரை அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளபொம்மன்பட்டி பிரிவில் உள்ள தனியார் நூற்பாலை அருகே அவர்கள் வந்தபோது, விறகுகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சாலையை கடப்பதற்காக பிரிவில் திடீரென்று வலது பக்கம் திரும்பியது. அப்போது திடீரென்று அந்த லாரியின் பின்புறம் கார் மோதியது. இந்த விபத்தில் லாரி சாலையில் கவிழ்ந்தது. அதேபோல் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் வந்த விஜயகாந்த், ராஜேந்திரன், லாரி டிரைவர் தினேஷ்குமார் (40) மற்றும் லாரியில் பயணம் செய்த வடமாநில தொழிலாளர்கள் நரேந்திரகுமார் (30), தீனாகுமார் (22), உபேந்திரகுமார் (40) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story