கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; நிதி நிறுவன அதிபர் பலி
தூத்துக்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.
நிதி நிறுவன அதிபர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் பிரேம் ஆனந்த் (வயது 45). இவர் ஆழ்வார்திருநகரியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது குடும்பத்தினருடன் தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சாந்திநகர் முதல் தெருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆழ்வார்திருநகரியில் இருந்து நிதி நிறுவன அலுவலக பணிகளை முடித்துக்கொண்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் முத்தையாபுரத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
பலி
திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் பொட்டல்காடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரேம் ஆனந்த் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பிரேம் ஆனந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த பிரேம் ஆனந்திற்கு நந்தினி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.