கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து
திருவண்ணாமலை அருகே கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கலசபாக்கம் அருகில் உள்ள பருவதமலைக்கு பவுர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நேற்று சென்னையை சேர்ந்த மதன்கோபால், மணிகண்டன், முரளி, வேலு, ராமு ஆகிய 5 பேர் காரில் சென்னையில் இருந்து பருவதமலைக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கு சாமி தாிசனம் செய்து விட்டு காரில் மீண்டும் சென்னையை நோக்கி புறப்பட்டனர். காரை மதன்கோபால் ஓட்டினார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் செல்லும் போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அறுத்து வைக்கப்பட்டு இருந்த புளிய மர கட்டையின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் வந்த 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.