தடுப்புச்சுவரில் மோதிய கார் கவிழ்ந்து விபத்து-7 பேர் உயிர் தப்பினர்


தடுப்புச்சுவரில் மோதிய கார் கவிழ்ந்து விபத்து-7 பேர் உயிர் தப்பினர்
x

திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது காட்பாடியில் தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேவகோட்டையை சேர்ந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேலூர்

காட்பாடி

திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது காட்பாடியில் தடுப்பு சுவரில் கார் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேவகோட்டையை சேர்ந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் சார்பில் கூறப்படுவதாவது:

தடுப்பு சுவரில் கார் மோதியது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 57). இவர், தனது மனைவி பெரியநாயகி (43), மகள்கள் அபிநயா (29), அனுசுயா (22), உறவினர் சிவசுப்பிரமணியம் (34), அவருடைய மனைவி மகேஸ்வரி (32), மகன் கவி அன்பு ஆகியோருடன் காரில் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு நேற்று அதிகாலை அவர்கள் சிவகங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆந்திர மாநில எல்லையை கடந்து வேலூர் மாவட்டத்துக்குள் அவர்களது கார் நுழைந்தது. காட்பாடி பகுதியில் உள்ள செங்குட்டை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்ததில் உள்ளே இருந்தவர்கள் அய்யோ, அம்மா என கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்து காருக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட 7 பேர் சிறு, சிறு காயங்களுடன் தப்பினர்.

இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்க கலக்கத்தில்...

விசாரணையில் சித்தூர் மாவட்டம் குடிபாலா அருகே அதிகாலை தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு செல்லலாம் என கார் டிரைவரிடம் முனியப்பன் கூறியுள்ளார். அதற்கு கார் டிரைவர் வேலூர் சென்று அறை எடுத்து தங்கி விட்டு செல்லலாம் என கூறி காரை ஓட்டி வந்துள்ளார். தூக்க கலக்கத்தில் டிரைவர் ஓட்டியபோது தடுப்பு சுவரில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்தது.

இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story