குமுளி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து கோர விபத்து:8 அய்யப்ப பக்தர்கள் பலியானது எப்படி?உருக்கமான தகவல்கள்
குமுளி மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 அய்யப்ப பக்தர்கள் பலியாகினர்.
அய்யப்ப பக்தர்கள்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கடந்த 22-ந்தேதி புறப்பட்டனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அவர்கள் நேற்று முன்தினம் இரவில் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
காரை பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 42) ஓட்டி வந்தார். இதில் 9 வயது சிறுவன் உள்பட மொத்தம் 10 பேர் இருந்தனர். இரவு சுமார் 11.30 மணி அளவில் இந்த கார் குமுளி-லோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே வந்து கொண்டிருந்தது.
கார் கவிழ்ந்தது
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி சுமார் 100 அடி பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் அங்கிருந்த மரத்தின் கிளையில் மோதி, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் செல்லும் ராட்சத குழாய்கள் மீது கார் தலைக்குப்புற விழுந்தது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடியபோது, அதற்குள் இருந்த 9 வயது சிறுவன் வெளியே தூக்கி வீசப்பட்டான். பின்னர் அந்த சிறுவன் காயங்களுடன் சாலையில் நின்று அழுது கொண்டிருந்தான். இதை அந்த வழியாக காரில் வந்தவர்கள் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் காரை நிறுத்தி சிறுவனிடம் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை கதறி அழுதபடி சிறுவன் கூறினான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான கார் மீட்கப்பட்டது.
8 பேர் பலி
இந்த கோர விபத்தில் ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தை சேர்ந்த நாகராஜ் (49), ஜக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி (50), தேவதாஸ் (50), சார்பதிவாளர் அலுவலக தெருவை சேர்ந்த சிவக்குமார் (40), சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த வினோத்குமார் (45), பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் (44), மறவப்பட்டியை சேர்ந்த கன்னிச்சாமி (55) ஆகிய 7 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் போராடி மீட்டனர்.
உயிருக்கு போராடிய டிரைவர் கோபாலகிருஷ்ணன், ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ராஜா (45), அவருடைய மகன் ஹரிஹரன் (9) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதில் ஹரிஹரன் சிகிச்சைக்காக குமுளியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், மற்ற 2 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
தந்தை-மகனுக்கு தீவிர சிகிச்சை
இதற்கிடையே குமுளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஹரிஹரன் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு அவனுக்கும் அவனது தந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உருக்கமான தகவல்கள்
விபத்தில் பலியான கலைச்செல்வன் ஆண்டிப்பட்டி ஒன்றிய தி.மு.க. முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் ஆவார். இவரது மனைவி குருவம்மாள். இவர் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நாகராஜ் ஆண்டிப்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தார். அவர்களும், பலியான மற்றவர்களும் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் ஒன்றாக மாலை அணிந்து, விரதம் இருந்தனர். ஒரே காரில் சபரிமலைக்கு சென்று திரும்பியபோது தான் இந்த கோர விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.