கார்-ஸ்கூட்டர் மோதி விபத்து; பெண் பலி
கூடலூரில் கார்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் பெண் பலியானார்.
கூடலூர்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு பகுதியை சேர்ந்தவர் சுலைமான். இவர் தனது மனைவி சர்புன்னிஷா(வயது 43), பேத்தி பாத்திமா சாயனா(6) ஆகியோருடன் ஒரு ஸ்கூட்டரில் கூடலூர் அருகே உள்ள பாடந்தொரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்கூட்டரை சுலைமான் ஓட்டினார்.
பின்னால் அவரது மனைவி, பேத்தி அமர்ந்து பயணம் செய்தனர். கூடலூரில் இருந்து தேவர் சோலை செல்லும் சாலையில் புஷ்பகிரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார், சுலைமானின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சர்புன்னிஷா கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். சுலைமான், அவரது பேத்தி பாத்திமா சாயனா லேசான காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சர்புன்னிஷா பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பாத்திமா சாயனா, சுலைமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.