இருதய நோய் சிகிச்சை முகாம்
இருதய நோய் சிகிச்சை முகாம் விருதுநகரில் நடைபெற்றது.
விருதுநகரில் ரோட்டரி சங்கம், அரிமா சங்கம் ஆகிய சேவை சங்கங்களுடன் இணைந்து அமிர்தா மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. விருதுநகர் வியாபார தொழிற்துறை சங்க செயலாளர் இதயம் முத்து தலைமையில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை நடத்தப்பட்டது. தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முகாமில் கலந்து கொண்ட டாக்டர் பாலாஜி முருகன் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு உள்ளதாகவும் அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் குறிப்பிட்டார். முகாமில் ரோட்டரி சங்க துணை ஆளுநர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இம் மாதிரியான இலவச சிகிச்சை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என இதயம்முத்து தெரிவித்தார்.