கவனிப்பாரற்ற சாலை...களத்தில் இறங்கிய பொதுமக்கள்...
கவனிப்பாரற்ற சாலை...களத்தில் இறங்கிய பொதுமக்கள்...
கோவை செல்வபுரம் முத்துசாமி காலனி சேத்துமா வாய்க்கால் பகுதியில் உள்ள 800 மீட்டர் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதுதொடர்பாக பல மாதங்களாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டு மனு அளித்து இருந்தனர். ஆனால் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுத்தபாடில்லை என்று தெரிகிறது.
சீரமைத்தனர்
ஆம் கவனிப்பாரற்ற சாலை.. கண்டுகொள்ளாத அதிகாரிகள் என்கிற நிலையே காணப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்களே களத்தில் இறங்கினர்.
இதையடுத்து சாலையை சீரமைக்கும் பணியில் அப்பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்களை கொண்டு ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் சாலையை சீரமைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள சாலையை சிரமைக்க கோரிக்கை வைத்து பல மாதங்கள் ஆனது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நாங்களே முன்வந்து சாலையை சீரமைக்க முடிவு செய்தோம். இதற்காக குடியிருப்பு வாசிகளின் பங்களிப்பில் ரூ.40 ஆயிரத்தில் சாலையை சீரமைத்து உள்ளோம். மேலும் எங்கள் பகுதியில் நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்காலான சேத்துமா வாய்க்கால் உள்ளது. ஆனால் இந்த வாய்க்கால் சரியாக தூர்வாராமல் கிடக்கிறது. இதனால் அங்கு சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டிச்செல்கிறார்கள்.
நடவடிக்கை
இதனால் அந்த சாலையின் ஓரம் ஏராளமான குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் எங்கள் பகுதியில் உள்ள சாலையில் தெருவிளக்குள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து கிடப்பதால் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகிறோம். திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் அரங்கேறும் அபாயம் உள்ளது. எனவே சேத்துமா வாய்க்கால் கரையோரம் தேங்கிகிடக்கும் குப்பைகளை அகற்றிடவும், தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி தரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.