சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
பரமத்திவேலூர் பைபாஸ் சாலையில் குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பரமத்திவேலூர்
சரக்கு வாகனம்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மகன் மதுபாலன் (வயது 23). இவர் நேற்று நாமக்கல்லில் இருந்து தாராபுரத்திற்கு சரக்கு வாகனத்தின் குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது.
பின்னர் சரக்கு வாகனம் சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார் விபத்தில் சிக்கிய சரக்கு வாகன டிரைவரை காப்பாற்றி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போக்குவரத்து பாதிப்பு
குளிர்பானங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் பைபாஸ் சாலையின் நடுவே கவிழ்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.