கோவில் உண்டியலை திருடிய தச்சுத்தொழிலாளி கைது
கோவில் உண்டியலை திருடிய தச்சுத்தொழிலாளி கைது
நெகமம்
நெகமத்தை அடுத்த ஏ.நாகூர் கிராமத்தில் பழமையான உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதால், தினமும் பூஜை நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மாலையில் கோவிலில் வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு, பூசாரி தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் மீண்டும் கோவிலுக்கு வந்தபோது, அங்கிருந்த உண்டியலை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நெகமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். அப்போது சமத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது மகனும், தச்சுத்தொழிலாளியுமான பாலமுருகன்(வயது 19) என்பவர் கோவில் உண்டியலை திருடியதும், அதில் ரூ.30 ஆயிரம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.