முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தர்மபுரி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்


முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தர்மபுரி செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 14 July 2023 1:00 AM IST (Updated: 14 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட சென்சு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கே.பி. அன்பழகன் (வயது 65). இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது 23.5.2016 முதல் 6.5.2021 வரை உள்ள காலக்கட்டத்தில் கே.பி. அன்பழகன் அவருடைய பெயரிலும், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பெயர்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் வந்தன.

இது தொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப்பதிவு செய்து கே.பி. அன்பழகன் வீடு, உறவினர்களின் வீடுகள், அவருக்கு தொடர்புடைய குவாரிகள், பள்ளி உள்பட மொத்தம் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்

இந்த சோதனையின் போது ரூ.2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கம், 6.63 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு நிதி பரிமாற்றம் மூலமாக ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 363 மதிப்பிலான சொத்துக்கள் சேர்த்ததாக கே.பி. அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள் மற்றும் அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்களை கடந்த மே மாதம் 22-ந் தேதி தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டான செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணை இனிமேல் தர்மபுரி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற உள்ளது.


Next Story