குழந்தை திருமணம் செய்துசிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் மீது போக்சோ வழக்குப்பதிவு
அரூர்:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ்வரன் (25). லாரி டிரைவர். இவர் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதனால் மாதேஸ்வரன் சிறுமியின் பெற்றோரிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மாதேஷ்வரன் சிறுமியிடம் கூறியுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி மாதேஷ்வரன் வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு சிறுமியை திருமணம் செய்து கொண்ட மாதேஷ்வரன் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவரை மருத்துவ பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாதேஷ்வரன் அழைத்து வந்துள்ளார். அங்கு டாக்டர்கள் வயதை கேட்டபோது அவர் 16 வயது சிறுமி என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அரூர் மகளிர் போலீசார் குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் மாதேஷ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.