1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,153 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம்
தர்மபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இது தொடர்பாக முதன்மை மாவட்ட நீதிபதியும் (பொறுப்பு) மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான டி.முனுசாமி, தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்ட நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும் தீர்த்து வைப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 4 தாலுகா நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெற்றது.
1,153 வழக்குகளுக்கு தீர்வு
இந்த மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2,227 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,040 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன. அதற்கான சமரச தொகை ரூ.3 கோடியே 9 லட்சத்து 75 ஆயிரத்து226-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மேலும் 150 வங்கி வாராக்கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 113 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டன. அதற்கான சமரச தொகை ரூ.2 கோடியே 47 லட்சத்து 78 ஆயிரத்து 365-க்கு சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மொத்தம் 1,153 வழக்குகள் சமரசம் பேசி தீர்க்கப்பட்டு சமரச தொகை ரூ.5 கோடியே 57 லட்சத்து 53 ஆயிரத்து 591-க்கு பேசி முடிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.