எம்.பி. மீது மோத வந்த காரை மடக்கி பிடித்தவருக்கு அரிவாள் வெட்டு
முதுகுளத்தூர் அருகே எம்.பி. மீது மோத வந்த காரை மடக்கி பிடித்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே எம்.பி. மீது மோத வந்த காரை மடக்கி பிடித்தவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
புதிய வீடு
முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் தர்மர். இவர் முதுகுளத்தூரில் வசித்து வருகிறார். புளியங்குடி கிராமத்தில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். அதனைப் பார்வையிட முதுகுளத்தூரில் இருந்து புளியங்குடிக்கு சென்று விட்டு முதுகுளத்தூருக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே அதிவேகமாக சிவப்பு நிற கார் ஒன்று எம்.பி. கார் மீது மோதும் நிலையில் வந்துள்ளது. டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து தர்மர் எம்.பி. புளியங்குடி கிராமத்தில் வசிக்கும் அக்காள் மகன் கோகுல கண்ணன் (வயது 24) என்பவருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து சிவப்புநிற கார் ஒன்று புளியங்குடி நோக்கி வருகிறது அதனை பிடித்து விசாரிக்கும்படி தெரிவித்தார்.
அரிவாள்வெட்டு
உடனே கோகுல கண்ணன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அந்த காரை மடக்கினர். காரில் இருந்த 4 பேர் அரிவாள் மற்றும் வாளுடன் இறங்கி கோகுலகண்ணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கோகுல கண்ணனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் கோகுல கண்ணனுக்கு வலது உள்ளங்கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த கோகுல கண்ணனை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.