அரூர் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தரக்கூறி இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை-அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது வழக்கு
அரூர்:
அரூர் அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி தரக்கூறி இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய அரசு பள்ளி ஆசிரியர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள போளையம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 23). பி.எஸ்சி. படித்துள்ளார். இவருக்கும் பில்பருத்தியை சேர்ந்த அசோக்குமார் (36) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அசோக்குமார் திப்பம்பட்டி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணத்தின்போது ரம்யாவின் பெற்றோர் 11 பவுன் நகை, திருமண செலவிற்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்பில் பல்வேறு சீர்வரிசை பொருட்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அசோக்குமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அரசு பள்ளி ஆசிரியருக்கு இவ்வளவுதான் வரதட்சணையா? என்று கூறி ரம்யாவை தரக்குறைவாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர்.
4 பேர் மீது வழக்கு
மேலும் கூடுதலாக பணம் மற்றும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வர வேண்டும் என்று ரம்யாவை பெற்றோர் வீட்டிற்கு அசோக்குமார் அனுப்பி உள்ளார். அதன் பின்னர் ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி மீண்டும் அசோக்குமாரின் வீட்டிற்கு ரம்யாவை அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ரம்யாவை மீண்டும் கொடுமைப்படுத்தி பெற்றோர் வீட்டிற்கு அசோக்குமார் அனுப்பியதாகவும், சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று கூறி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா இதுபற்றி அரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகனப்பிரியா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அசோக்குமார், அவருடைய தாயார் நாகஜோதி (55), தங்கை அர்ச்சனா (32) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள் வாங்கி தரக்கூறி மனைவியை, அரசு பள்ளி ஆசிரியரே வரதட்சணை கொடுமைபடுத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.