ஆட்டோ டிரைவர்கள் 50 பேர் மீது வழக்கு
தர்மபுரியில் ஆட்டோ டிரைவர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி, ரகுநாதன் மற்றும் போலீசார் நெசவாளர் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்டோவில் விதிகளை மீறி அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், டிரைவர் சீருடை அணியாமல் இருத்தல், ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிமம் புதுப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 50 ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதற்கான அபராதத்தை விதித்தனர். இதேபோல் செல்போன் பேசியபடி சென்ற 7 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.