காரிமங்கலம் அருகே குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


காரிமங்கலம் அருகே குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Jun 2023 1:00 AM IST (Updated: 28 Jun 2023 1:25 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே குழந்தை திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் மூலம் பழக்கம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மோதூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரமணி (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமி கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காரிமங்கலத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் வசித்து வந்தனர்.

வாலிபர் மீது வழக்கு

இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமி பெற்றோர் வீட்டுக்கு பிரசவத்திற்காக சென்று விட்டார். 9 மாதம் கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை தென்காசியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது சிறுமிக்கு தற்போது தான் 18 வயது பூர்த்தியாகி இருப்பதும், அவரை மகேந்திரமணி குழந்தை திருமணம் செய்து கொண்டு கர்ப்பம் ஆக்கியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து டாக்டர்கள் தென்காசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார், காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியை குழந்தை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய மகேந்திரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story