ஊராட்சி தலைவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி தலைவரை மிரட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிட்டசூராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில், கோவில்பாளையத்தை சேர்ந்த ராஜா (வயது 48), கிட்டசூராம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமாரசாமி (45) ஆகியோர் சேர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் புகார் மனுக்களை அதிகமாக கொடுப்பதும், ஊராட்சி நிர்வாகம் பாதிக்கும் வகையில் அச்சுறுத்தி பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர். மேலும் போலி முத்திரை தயாரித்து முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர்.
இந்தநிலையில் ராஜா, முத்துக்குமாரசாமி ஆகியோர் புகார் மனுக்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படை காரணத்தை தவறாக பயன்படுத்தி சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஊராட்சி நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோர்ட்டு முத்திரை மற்றும் போலியாக ஆவணங்களை தயாரித்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.